search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசத்துரோக சட்டம்"

    பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார். #LokSabhaElections2019 #RajnathSingh
    காந்திதாம்:

    குஜராத் மாநிலம் கட்ச்  மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகரில்  நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மோடி தலைமையிலான பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஊழலை வேரோடு அகற்றிவிட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், அந்த இலக்கை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

    தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பவர்களை நாம் மன்னித்து விட வேண்டுமா? எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனியாக பிரதமரை நியமிக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370, 35ஏ ஆகியவை திரும்பப் பெறப்படும்.



    கடந்த 2007ஆம் ஆண்டே செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை உருவாக்கும் திட்டம் விஞ்ஞானிகளிடம் இருந்தது. ஆனால், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த சமயத்தில் ரஷியா, சீனா, அமெரிக்கா மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை கொண்டிருந்தன. தற்போது, மோடி ஆட்சியில் மிஷன் சக்தி என்ற பெயரில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. #LokSabhaElections2019 #RajnathSingh

    ×